Thursday, August 12, 2010

வேண்டாம் வளர்ச்சி

தென்னிந்தியாவின் மான்செஸ்டர்ன்னு  சொல்ல படற   எங்க கோவையில 80 -90 களில் மில் தொழிலாளர்களும், சிறிய அளவிலாவது வொர்க் shop  வைத்திருந்தவர்களும் , ஒரு வீதியில் ஓரிரண்டு வீடுகளிலாவது தறி வைத்து சொந்த தொழில் செய்தவர்களும்  ஏராளம். பெண்களும் வீட்டிலிருந்த படியே ராட்டினம் சுற்றும் வேலையையும் செய்துகொண்டிருந்தனர்.

மில் தொழிலாளிக்கு பெண் கொடுக்க நான் நீ என்று போட்டி போட்டுகொண்டு வருவார்களாம். தீபாவளி சமயத்தில் அவர்களுக்கு கிடைக்கும் போனஸ் தொகையை பார்த்து அரசு ஊழியர்களே வியந்து பார்ப்பார்களாம். அதோடு, ஒவ்வொரு மில்லிற்க்கும்  ஒரு சங்கு (Horn ) சத்தம் உண்டு. அந்த சத்தத்தை வைத்தே பெரியவர்கள் நேரத்தை சரியாக சொல்லவதையும் , இந்த மில்லுல இருந்து இந்த சத்தம் வருதுன்னு சொல்ல்றதயும் கேட்டு பல நேரங்களில் நான் ஆச்சர்யபட்டதுண்டு. 80  களின் பிற்பாதியில் இருந்தே பல மில்களும் மூடி விட கோவைக்கு வந்தது முதல் பாதிப்பு.  நவீன  எந்திரங்கள் வரவும், ஆள்குறைப்பும், நடந்தேறி இன்று நல்ல நிலையில் ஓடி கொண்டிருக்கும் மில்களை விரல் விட்டு எண்ணி விடும் அளவுக்கு குறைந்து போனது.
சாலையோரங்களில் கிடக்கும் இரும்பு சுருள்கள் சொல்லும் இந்த ஏரியாவில் இருக்கும் வொர்க் ஷாப்களின் எண்ணிக்கை பற்றி. சில பெரிய நிறுவனங்களில் தயாரிக்கப்படும் பொருட்களின், உதிரி பாகங்கள் தயாரிக்க  பயன்படுதப்பட்ட லேத் வோர்க்ஷோப்களில், மீதியாகும் இரும்பு சுருள்களை ஏற்றி செல்லும் வண்டிகளை பார்த்தாலே தெரியும் எந்த அளவிற்கு அங்க production நடந்திருக்குன்னு. நவீன எந்திரங்கள் வரவால் சிறு தொழிலதிபர்களும் இன்று காணமல் போய் விட்டார்கள்.

"காடா" ,"மல்" துணி என்று வெள்ளையும் அல்லாமல் , சந்தன நிறமும் அல்லாமல் , தயாராகும் துணி தயாரிக்க படும் "விசை தறி" இயக்கமும் இங்கு பிரபலமாக இருந்ததுண்டு. "தடக், தடக்" ன்னு கேட்கற சத்தம் கேட்டு பழக்கியவர்களுக்கு இந்த தறி சத்தம் கேட்கலைன்னா தூக்கம் வராது,  குழந்தைகளுக்கு தொட்டில் கட்டவும், தையல் பயிற்சி கூடங்களிலும் இந்த துணிய அதிகமாகவே உபயோகித்து வந்தனர். பள்ளிகளில்  embroidary போடவும் இந்ததுணி தான் பயன்பட்டது. (1 மீ வெறும் 7 அல்லது 8 ரூபாய் தான்) சோமனூர் போன்ற புறநகர் பகுதிகளில் மட்டுமே இந்த விசைத்தறி தற்போது இயங்கி வருகிறது. இதில் வீட்டில் இருக்கும் பெண்களும் ராட்டினம் சுற்றுவதும் , இந்த நூலிலிருந்து பெரிய பெரிய கயிறுகள் தயாரிப்பதும், என்று எங்கு திரும்பினாலும் எதாவது ஒரு தொழில் நடைபெற்று கொண்டிருக்கும். காலம் மாற மாற எதையுமே பரவலாக காண முடிவதில்லை. சுய தொழில் செய்பவர்களையும் காண முடிவதில்லை.

இவ்வாறான சிறு தொழில்கள் அழிந்து எங்கும் கணினி யுகம். கணினி துறையை மேம்படுத்தும் விதமாய் "Tidal பார்க்" வருகை வேறு, கணினிதுறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தபடுகின்றது. கணினி துறை மட்டும் தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ற்ற துறையா? மற்ற துறைகளை அல்லது மற்ற தொழில்களை பின் தள்ளி விட்டு ஒரு துறையை சார்ந்தவர்கள் மட்டும், ஒரு தொழில் மட்டும் முன்னேறுவது சரியா? தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ன்னு பெயர் பற்ற ஒரு நகரம் I .T  நகரமாக மாறுவது உண்மையிலேயே முன்னோக்கிய ஒரு நிலை தானோ?
"எலக்ட்ரோனிக் சிட்டி"ன்னு அழைக்க பட்ட பெங்களூர் நகரம் இன்று I .T  நகரமாக மாறிவிட்டது, அதே  நிலை தான் கோவை நகருக்கா?

இந்த கணினி துறை வளர்ச்சியால் நாம் இழந்தது எனன?

இதனால் எங்களது விளை நிலங்கள் அடுக்கு மாடி குடியிருப்பாகவும், பெரிய பெரிய தங்கும்  விடுதிகளாகவும் மாறி வருகிறது. வீடுகளில் மரங்கள் இருந்த இடங்களில் கூட மரங்களை அகற்றி ஒரு சிறிய அறையாவது கட்டி வாடகைக்கு விடும் அளவிற்கு, பணதேவைகளால்  மனங்கள் மாறிபோய் விட்டன. ஏற்கனவே தற்போது இருக்கும்  கூட்டத்தில், எங்கள் "நொய்யல் " வேறு தொலைந்து போயிற்று. பல குளங்களும் இருந்த இடம் தெரியாமல் குட்டி சுவராய், குடிசைகளாக மாறிவிட்டது. இப்போது இருக்கும் நிலையில் கோவைக்கு குடிநீர் ஆதாரமாய்  இருப்பது சிறுவானியும், அத்திகடவும் தான். மக்கள் தொகை பெருக்கத்தில், புது புது கட்டிடங்களில் குடிபுகும் அனைவருக்கும் இருக்கும் தண்ணீர் பத்தாது , அதிலும் நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கு  நிறைய தண்ணீர் செல்லும் போது, கிராமப்புறங்களில், கொஞ்சம் ஒதுக்கு புறங்களில் இருப்பவர்கள் தண்ணீருக்கு எங்கு செல்வார்கள்?  60 , 70 அடிகளிலேயே தண்ணிர் கிடைத்த இடங்களில் கூட தற்போது 500 அடிக்கும் மேல் தான் தண்ணீர் தென்படுகிறது. கோவையின் நீர் ஆதாரத்தை உயர்த்த இதுவரி எந்த திட்டமும் இல்லை. கேரள மாநிலத்துடன் சிறுவாணி அணைக்காக போட்ட 100 ஆண்டு கால ஒப்பந்தமும் நிறைவடையும் நேரத்தில், இவ்வளவு மக்களின் தண்ணீர் தேவை எப்படி பூர்த்தியாகும்?

பழையன கழிதலும், புதியன புகுதலும் ன்னு புது புது தொழில்கள் வருவதனால், பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதெல்லாம் சரியே. ஆனால் I .T துறையினருக்கு கிடைக்கும் பல ஆயிர, லட்ச சம்பளத்திற்கு ஏற்ப விலைவாசியும் உயர்ந்து கொண்டே தான் போகும்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் கூட வருமானத்திற்கு ஏற்ப வாழ்க்கை நடத்த முடியுமாம்,10 ரூபாயில் கூட ஒரு நேர உணவு  கிடைக்குமாம். ஆனால் கோவையில் எல்லாமே விலை அதிகம் தான், இனி இது யாருக்கான நகரம்? சாதாரண தொழில் செய்பவர்களால் இனி பிழைக்க முடியுமா?

"பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்" -    உயரத்தான் முடியுமா?

தெரியாதவர்களாக இருந்தாலும் "வா கண்ணு சாப்பிட்டு போகலாம்" ன்னு அன்பா சொல்லிட்டு இருந்த மக்கள் பிழைக்க கஷ்டப்படும்  சமயத்துல, வேறு மாநிலமக்கள் வந்து இங்கு பிழைப்பதை ஏற்று கொள்ளத்தான் வேண்டுமோ? எங்க ஊரு மக்கள்  வாழ்க்கை நடத்த முடியாமல், எங்க மண்ணுக்கான அடையாளம் காணாம போக செய்யற இந்த வளர்ச்சி வேண்டாம்................