" சாதிகள் இல்லையடி பாப்பா "
இப்படி பாரதியார் அந்த காலத்துலயே சாதிகள் ஒழிக்க்கப்படனும்னு நினச்சு தான் பாடினார். ஆனா 21 ம் நூற்றாண்டில, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஜாதி அவசியம்னு விவாதம் நடந்துட்டு இருக்கு.
அந்த காலத்துல அவரவர் செய்யும் தொழில்களின் அடிப்படையில ஜாதிகள் உருவாகி இருக்கலாம். உயர்ந்தவன், தாழ்ந்தவன்ற பாகுபாடெல்லாம் இருந்தது. ஆனா, சில கிராமங்கள் தவிர்த்து இப்ப அந்த நிலைமை எல்லாம் மாறிடிச்சு. தாழ்ந்த குலம்ன்னு சொல்லப்பட்ட பலரும், தற்போது நல்லா படிச்சு, நல்ல நிலமையில இருக்காங்க. இதுல கலப்பு திருமணம் செஞ்சவங்களும் இருக்காங்க. கலப்பு திருமணம் செய்யறவங்களோட எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்துட்டே தான் போகுது. இந்த நிலமையில, ஜாதி வாரியான கணக்கெடுப்புன்னா, ஓர் ஆணோட சாதிய ஒரு குடும்பம் முழுமைக்கும்னு எடுப்பாங்களா? இல்ல ஒரே குடும்பத்தில் இருந்தாலும் கணவன், மனைவின்னு ரெண்டு பேரோட ஜாதியையும் கணக்கில் எடுத்துக்குவாங்களா?
மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிஞ்சதுக்கு அப்புறமா ஒரு ஒரு ஜாதியை (அ) வகுப்பை சார்ந்தவர்கள் இவ்வளவு அப்படிங்கற விபரம் அறியப்படுமோ? அப்படி இருக்கும் பட்சத்தில் , சிறுபான்மை மக்கள் நாங்கள்னும், பெரும்பான்மை சமூகம் எங்களுடயதுன்னும் ஒரு பாகுபாடு வந்தால் இதுவே பல பிரிவினைகளுக்கும் வழிவகுக்குமே!
சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தினால் தான் பின் தங்கிய வகுப்பை சார்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கறாங்கன்னு தெரியும்னு லாலு பிரசாத் சொல்லியிருக்கார், இதுல நலத்திட்டங்கள் போய் சேருதோ இல்லையோ, அடுத்த "election " ல இன்னும் பல சாதி கட்சிகள் வரை வாய்ப்பு இருக்கு.
எவ்வளவு தான் படித்தவர்களாய் இருந்தாலும், இன்னமும் சாதியை பற்றிய பேச்சுக்கள் நடை பெற்று கொண்டு தான் இருக்கிறது. (இது யாரையும் புண் படுத்தும் எண்ணத்துடன் எழுதப்பட்டது இல்லை)
சென்ற வாரம் எங்கள் அலுவலகம் வாயிலாக ஒரு கருத்தாய்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்தோம், அதன் பின், அந்த நிகழ்ச்சியில் வந்திருந்தவர்களில் இவர் என் வகுப்பை சார்ந்தவர், இவர் என் உறவினர் என்று என் நண்பர் கூறியதை கேட்கும் போது, உண்மையிலேயே மனவருத்தமாக இருந்தது, அவர் அதை ஒரு பெரிய விசயமாக எடுத்து சொல்லவில்லை என்பதை நான் அறிந்த போதிலும், நம் மனதில், நம் இனம், நம் குலம் என்ற பாகுபாடு நன்றாகவே விதைக்க பட்டு இருப்பதை உணர்ந்தேன்.
பொதுவாக ஒரு பொருள் தனக்கு கிடைக்கவில்லை என்றால் மட்டுமே, அந்த பொருளை பற்றிய தாழ்ந்த கருத்துக்கள் வெளிப்படும். அதுபோல, இந்த விஷயத்தை பற்றி பேசுவதால் என்னை தாழ்ந்த குலமென்று எண்ணி விட வேண்டாம். என்னை உயர்ந்த குலமென்று நினைக்க வேண்டும் என்பதற்காகவும் இதை சொல்லவில்லை.
இதிலும் பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, சில நூறுகள் செலவு செய்து சான்றிதல் வாங்கிய பலரையும் நான் அறிவேன். ஏன் எங்கள் வீட்டில் கூட, என் மூத்த சகோதரர் (FC ) , இந்த காரணத்தினாலேயே கல்லூரியில் இடம் கிடைக்க சற்று சிரமமாக இருந்தது, பின் அவரது முயற்சியால் சான்றிதல் கிடக்க பெற்ற நானும் என் இளைய சகோதரரும் பின் தங்கிய வகுப்பை சார்ந்தவர்கள். தற்போது, ஒவ்வொருவரும் வேலை நிமித்தமாக ஒவ்வொரு இடங்களில் இருக்கிறோம். மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி , ஜாதியை சொல்வதானால் உண்மையான ஜாதியை சொல்வதா? இல்லை சான்றிதழில் இருக்கும் ஜாதியை சொல்வதா?
"சாதிகள் இல்லையடி பாப்பா" ன்னு எங்க சாதிய சேர்ந்த ஒருத்தர் சொல்லியிருக்கார்ன்னு விளையாட்டாக சொல்வார் என் நண்பர். எது எப்படியோ ,எந்த ஒரு விசயமுமே அழிவுக்கு வழிகாட்டாமல், ஆக்கத்திற்காக இருந்தால் சரிதான். மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பின், இந்தியாவின் No .1 சாதி (மக்கள் தொகையில்) எங்களுடயதுன்னு ஒரு கூட்டம் வராமல் இருந்தால் சந்தோசமே ....
Sunday, June 13, 2010
Subscribe to:
Posts (Atom)