Sunday, February 27, 2011

சும்ம்மம்மா



பதிவெழுத  வந்து 1 வருடம் ஆகிறது. எழுத நிறைய இருந்தாலும் நேரம் இல்லை என்ற ஒன்றை சொல்லியே நிறைய தவற விடவேண்டியதாகிறது. இனி மேல் குறைந்தது மாதம் ஒரு பதிவாவது இட வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். (பாப்போம்!)

சென்ற வாரத்தில் நிறைய அலுவலக வேலைகள் இருந்த காரணத்தால் வாங்கிய மளிகை சாமான்களை கூட எடுத்து வைக்க முடியவில்லை. தேஜாவும் எதாவது விளையாடலாம் என்று நச்சரித்து கொண்டிருந்தாள். அவளுக்கும் நேரம் போகணும் , எனக்கும் வேலை ஆகணுமே , ஒரு ஒரு சாமான்களையும் பிரித்து போட ஒரு ஸ்பூனும், ஜாரும் கொடுத்து விட்டேன், அவளும் ஒரு துளி கூட சிந்தாமல் கவனமாக செய்து விட்டாள், இதுவும் மனதை ஒருமுக படுத்தும் செயல்தான், சிந்த கூடாது என்பதற்காகவே பொறுமையுடன் 30  நிமிடம் செய்தாள்.  பொருட்களின் பெயரையும் தெரிந்து கொள்ளவும்  என் வேலை சுலபமாக முடியவும் உதவிற்று. 

Tuesday, December 28, 2010

எண் விளையாட்டு

இந்த விளையாட்டு விளையாட குறைந்தது 3  பேராவது வேண்டும். முதலில் ஒருவர் ஒன்று என ஆரம்பிக்க அடுத்தவர் இரண்டு, மூன்று என  வரிசையாக ஒவ்வொருத்தரும் சொல்லிகொண்டே வரவேண்டும். 10 ம், 10  இன் மடங்குகளும் வரும் போது காய்களின் பெயரை சொல்லவேண்டும். ஒருவர் சொல்லிய காய்களின் பெயரை மற்றவர் சொல்லகூடாது, இந்த வரிசையில் 10  இன் மடங்குகளின்  பொழுது  பழங்களின் பெயர்கள், போக்குவரத்து சாதனங்கள், மரங்களின் பெயர்கள், விலங்குகளின் பெயர்கள், ஏதாவதொரு பாடல் பாடலாம் என்று விளையாடினோம். இந்த முறையில் எண்களும் நன்றாக நினைவில் இருக்கும். அதோடு அவர்களுக்கு தெரிந்த விசயங்களை   நினைவு படுத்த வசதியாகவும் இருக்கும். இதை ரொம்பவே interesting  ஆகவே விளையாடினார்கள்.

Happy x -mas

தேஜாவின் ஆசிரியருக்கு   நாங்களே செய்து  பரிசளித்த x -mas tree .

Thursday, December 16, 2010

சிலைவடித்தேன் என் சின்ன பெண்ணிற்கு......

நிறைய வேலைகள் இருந்ததால் (அரையாண்டு தேர்வுக்காக தேஜாவை தயார் (! ) செய்ய நேரம் ஒதுக்கியதாலும், அதிக குளிர் மற்றும் மழை காரணமாக எங்களுக்கு உடல்நலம் சரி இல்லாததாலும்) பதிவுலகம் பக்கம் வர முடியவில்லை.. எனினும், எங்களது விளையாட்டுக்கள் வழக்கம் போலத்தான்... சிலநேரங்களில் ரஞ்சித்தும், தேஜாவும் துரு துறுன்னு ஓடிகிட்டே இருப்பாங்க. இந்த குழந்தைகள கொஞ்ச நேரம் அமைதியா உக்காரவைக்க இப்ப நாங்க விளையாடற விளையாட்டு தான் "statue ".

 statue  சொன்னா அப்படியே சிலை மாதிரி  ஆடாம அசையாம நிக்கணும், "ரிலீஸ் " சொன்னதுக்கு அப்புறமாதான் அசையணும். முதன்முதலா statue  ன்னு தேஜாகிட்ட சொல்லி, அவளால ஆடாம அசையாம 2  செகண்ட் கூட இருக்க முடியல. சிரிச்சுடுவா, இல்ல கண்கள மட்டுமாவாது உருட்டிட்டு இருப்பா. ஆனா, அதுவே பழக பழக இப்ப 1 நிமிடம் வரை இருக்க முடியுது. இந்த விளையாட்டு மூலமா, அந்த ஒரு நிமிடத்தில் அமைதியா இருக்க வைக்க முடியுது. அதோட ஆடாம அசையாம இருக்கனும்ன்னு மனதை ஒருமுகப் படவைக்குது.அத விட நாம இந்த விளையாட்ட  ஆரம்பிச்சா போதும் மாத்தி மாத்தி STATUE  சொல்லி நம்மள நம்ம வேலை செய்ய விட்டுடறாங்க .....
      
    அதே  சமயம், நாமளும் அவங்க statue சொல்ற போது, சிலை மாதிரி நிக்கனுமே, அதுலதான் சிக்கலே, முக்கியமான ஏதாவது வேலையா இருக்கும் போது statue சொல்லிடுவா. அதிலும் குறிப்பா, சாப்பாடு எடுத்துட்டு வரும் போது statue  சொல்லிட்டு ஓடிடுவா. அவ ரிலீஸ் சொல்றவரை அப்படியே நிக்க வேண்டியதுதான். ஒருமுறை, அப்படிதான், அவபாட்டுக்கு statue  சொல்லிட்டு என் முகம் முழுதும் பொட்டால கோலம் போட்டு அவ கிளிப் எல்லாத்தையும் என் மேல குத்திவிட்டு, என்னை அலங்கார (அலங்கோல) படுத்திட்டா. நல்ல வேளை, அந்த சமயத்துல யாரும் வீட்டுக்கு வரல,

சமீபத்தில் My pals &  Me ல 4 புத்தகங்கள் வாங்கி  இருக்கிறோம். மொத்தம் 6 புத்தகங்கள் கொண்ட series இது. ஓவ்வொரு புத்தகத்திலும் 2 கதைகள்.கூடவே ஒவ்வொரு கதைக்கு பின்னும் சில கேள்விகள் இருக்கு . அதற்க்கான் பதில்களும் கடைசியில் இருக்கு. நாங்கள் இன்னும் படிக்க ஆரம்பிக்க வில்லை, புத்தகங்களின் பட்டியல் இதோ:

1A) BRAVE LITTLE KITTY & HELPFUL KITTY
1B) CLEVER TUKTUK & THE NAUGHTY RATS
2A) CLEVER TOTO & SMART TOTO
2B) BRUNO LEARNS TO TAKE TURNS & BRUNO LEARNS TO SHARE
3A) LAZY SAMMY & SMART SAAMY
3B) MISHKA SAVES TREES & COPYCAT MISHKA
ஒவ்வொன்றும் ரூ. 75 /- .


Sunday, October 17, 2010

கூட்டலும், கழித்தலும்



தேஜாவுடன் நான் அதிகம் செலவழிக்கும் நேரம் என்றால் அது அவளுக்கு சாப்பாடு ஊட்டும் நேரம் தான். சில சமயம் கொஞ்சமாக சாப்பிட்டு விட்டு "போதும், போதும்" என்று சொல்லுவதுண்டு. அந்த சமயத்தில் அவளது கவனத்தை திருப்ப, இன்னும் கொஞ்சம் சாப்பிட வைக்கலாமே என்று தோன்றும் போது, இன்னும் 10 வாய் (முறை) சாப்பிட்டால் போதும் என்று சொல்லி விடுவேன். இதனால, அவளும் கை விரல்கள் 10 அயும் நீட்டி ,ஒவ்வொரு வாய் சாப்பிடும் போதும் ஒரு ஒரு விரலை மடக்கி கொண்டே வருவாள். இதன் மூலம் decenting order பற்றி அறிந்து கொள்ளவும், 10 முதல் 1 வரை வேகமாகவும் சொல்ல தெரிகிறது.

அவளுக்கு எது பிடிக்குமோ அதிலிருந்தே கூட்டல் சொல்லிதர எண்ணினேன். இந்த இரண்டாவது டெர்ம்மில் count and write - வருகிறது. இதற்காக நாங்க பின்பற்றியது தான் இந்த முறை, தேஜாவுக்கு சாக்லேட் சாப்பிடுவதை காட்டிலும், டப்பாக்களில் சேர்த்துவைப்பதில், அதுவும் கலர் கலராக இருப்பதை பார்க்க பிடிக்கும். வீட்டிற்க்கு வரும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கென்றே நிறைய வாங்கி வைத்திருப்போம். அதை வைத்தே இந்த activity செய்தோம். மொத்தமாக 10 சாக்லேட் எடுத்துகொண்டோம். எனக்கு 5 தேஜாவுக்கு 5 . நான் எவ்வளவு சாக்லேட் கொடுகிறேனோ அதே அளவுக்கு அவளும் தர வேண்டும். இரண்டும் சேர்த்து எவ்வளவு இருக்கிறதென்று கூட்டி அவள் சொல்லவேண்டும். அதோடு எங்கள் கைகளில் மீதியுள்ள சாக்லேட்களின் எண்ணிகையை கூட்டி, கை விரல்கள் 10 இல் இருந்து கழித்து சொல்ல வேண்டும். மீதமுள்ள சாக்லேட் 4 என்றால், 10 விரலில் 4 ஐ மடித்து 6 என்றும் சொல்லவேண்டும். சரியாகவே செய்தாள்.. இந்த கலர் புல் விளையாட்டு மூலம் , அவள் ஓரளவிற்கு கூட்டல், கழித்தல் பற்றி புரிந்தது போல இருந்தது. இந்த முறையில் கூட்டுத்தொகை 10    வரை மட்டுமே விளையாடினோம். மீண்டுன் ஒரு முறை விளையாடும் போது கூட்டு தொகையின் எண்ணிக்கையை அதிக படுத்த வேண்டும் என்றும் எண்ணி உள்ளேன்.

இது போல குழந்தை தனமாக எங்கள் activities இருப்பதாலேயே, எங்களது activities பற்றி வலைபக்கத்தில் எழுதுவதில்லை. தீக்ஷு வின் ப்ளாக் படித்ததற்கு பிறகே இதையும் கூட எழுதலாம் என்று எண்ணி எழுதி உள்ளேன்.


இதை தீக்ஷுவின் தளத்தோடு இணைத்துள்ளேன். தீக்ஷுவின் அம்மா , தீக்க்ஷுக்காக நிறைய activities செய்து வருகிறார். மிக உபயோகமான தளம்.  நிச்சயம் http://dheekshu.blogspot.com/ சென்று பார்க்கவும்.

Thursday, August 12, 2010

வேண்டாம் வளர்ச்சி

தென்னிந்தியாவின் மான்செஸ்டர்ன்னு  சொல்ல படற   எங்க கோவையில 80 -90 களில் மில் தொழிலாளர்களும், சிறிய அளவிலாவது வொர்க் shop  வைத்திருந்தவர்களும் , ஒரு வீதியில் ஓரிரண்டு வீடுகளிலாவது தறி வைத்து சொந்த தொழில் செய்தவர்களும்  ஏராளம். பெண்களும் வீட்டிலிருந்த படியே ராட்டினம் சுற்றும் வேலையையும் செய்துகொண்டிருந்தனர்.

மில் தொழிலாளிக்கு பெண் கொடுக்க நான் நீ என்று போட்டி போட்டுகொண்டு வருவார்களாம். தீபாவளி சமயத்தில் அவர்களுக்கு கிடைக்கும் போனஸ் தொகையை பார்த்து அரசு ஊழியர்களே வியந்து பார்ப்பார்களாம். அதோடு, ஒவ்வொரு மில்லிற்க்கும்  ஒரு சங்கு (Horn ) சத்தம் உண்டு. அந்த சத்தத்தை வைத்தே பெரியவர்கள் நேரத்தை சரியாக சொல்லவதையும் , இந்த மில்லுல இருந்து இந்த சத்தம் வருதுன்னு சொல்ல்றதயும் கேட்டு பல நேரங்களில் நான் ஆச்சர்யபட்டதுண்டு. 80  களின் பிற்பாதியில் இருந்தே பல மில்களும் மூடி விட கோவைக்கு வந்தது முதல் பாதிப்பு.  நவீன  எந்திரங்கள் வரவும், ஆள்குறைப்பும், நடந்தேறி இன்று நல்ல நிலையில் ஓடி கொண்டிருக்கும் மில்களை விரல் விட்டு எண்ணி விடும் அளவுக்கு குறைந்து போனது.
சாலையோரங்களில் கிடக்கும் இரும்பு சுருள்கள் சொல்லும் இந்த ஏரியாவில் இருக்கும் வொர்க் ஷாப்களின் எண்ணிக்கை பற்றி. சில பெரிய நிறுவனங்களில் தயாரிக்கப்படும் பொருட்களின், உதிரி பாகங்கள் தயாரிக்க  பயன்படுதப்பட்ட லேத் வோர்க்ஷோப்களில், மீதியாகும் இரும்பு சுருள்களை ஏற்றி செல்லும் வண்டிகளை பார்த்தாலே தெரியும் எந்த அளவிற்கு அங்க production நடந்திருக்குன்னு. நவீன எந்திரங்கள் வரவால் சிறு தொழிலதிபர்களும் இன்று காணமல் போய் விட்டார்கள்.

"காடா" ,"மல்" துணி என்று வெள்ளையும் அல்லாமல் , சந்தன நிறமும் அல்லாமல் , தயாராகும் துணி தயாரிக்க படும் "விசை தறி" இயக்கமும் இங்கு பிரபலமாக இருந்ததுண்டு. "தடக், தடக்" ன்னு கேட்கற சத்தம் கேட்டு பழக்கியவர்களுக்கு இந்த தறி சத்தம் கேட்கலைன்னா தூக்கம் வராது,  குழந்தைகளுக்கு தொட்டில் கட்டவும், தையல் பயிற்சி கூடங்களிலும் இந்த துணிய அதிகமாகவே உபயோகித்து வந்தனர். பள்ளிகளில்  embroidary போடவும் இந்ததுணி தான் பயன்பட்டது. (1 மீ வெறும் 7 அல்லது 8 ரூபாய் தான்) சோமனூர் போன்ற புறநகர் பகுதிகளில் மட்டுமே இந்த விசைத்தறி தற்போது இயங்கி வருகிறது. இதில் வீட்டில் இருக்கும் பெண்களும் ராட்டினம் சுற்றுவதும் , இந்த நூலிலிருந்து பெரிய பெரிய கயிறுகள் தயாரிப்பதும், என்று எங்கு திரும்பினாலும் எதாவது ஒரு தொழில் நடைபெற்று கொண்டிருக்கும். காலம் மாற மாற எதையுமே பரவலாக காண முடிவதில்லை. சுய தொழில் செய்பவர்களையும் காண முடிவதில்லை.

இவ்வாறான சிறு தொழில்கள் அழிந்து எங்கும் கணினி யுகம். கணினி துறையை மேம்படுத்தும் விதமாய் "Tidal பார்க்" வருகை வேறு, கணினிதுறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தபடுகின்றது. கணினி துறை மட்டும் தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ற்ற துறையா? மற்ற துறைகளை அல்லது மற்ற தொழில்களை பின் தள்ளி விட்டு ஒரு துறையை சார்ந்தவர்கள் மட்டும், ஒரு தொழில் மட்டும் முன்னேறுவது சரியா? தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ன்னு பெயர் பற்ற ஒரு நகரம் I .T  நகரமாக மாறுவது உண்மையிலேயே முன்னோக்கிய ஒரு நிலை தானோ?
"எலக்ட்ரோனிக் சிட்டி"ன்னு அழைக்க பட்ட பெங்களூர் நகரம் இன்று I .T  நகரமாக மாறிவிட்டது, அதே  நிலை தான் கோவை நகருக்கா?

இந்த கணினி துறை வளர்ச்சியால் நாம் இழந்தது எனன?

இதனால் எங்களது விளை நிலங்கள் அடுக்கு மாடி குடியிருப்பாகவும், பெரிய பெரிய தங்கும்  விடுதிகளாகவும் மாறி வருகிறது. வீடுகளில் மரங்கள் இருந்த இடங்களில் கூட மரங்களை அகற்றி ஒரு சிறிய அறையாவது கட்டி வாடகைக்கு விடும் அளவிற்கு, பணதேவைகளால்  மனங்கள் மாறிபோய் விட்டன. ஏற்கனவே தற்போது இருக்கும்  கூட்டத்தில், எங்கள் "நொய்யல் " வேறு தொலைந்து போயிற்று. பல குளங்களும் இருந்த இடம் தெரியாமல் குட்டி சுவராய், குடிசைகளாக மாறிவிட்டது. இப்போது இருக்கும் நிலையில் கோவைக்கு குடிநீர் ஆதாரமாய்  இருப்பது சிறுவானியும், அத்திகடவும் தான். மக்கள் தொகை பெருக்கத்தில், புது புது கட்டிடங்களில் குடிபுகும் அனைவருக்கும் இருக்கும் தண்ணீர் பத்தாது , அதிலும் நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கு  நிறைய தண்ணீர் செல்லும் போது, கிராமப்புறங்களில், கொஞ்சம் ஒதுக்கு புறங்களில் இருப்பவர்கள் தண்ணீருக்கு எங்கு செல்வார்கள்?  60 , 70 அடிகளிலேயே தண்ணிர் கிடைத்த இடங்களில் கூட தற்போது 500 அடிக்கும் மேல் தான் தண்ணீர் தென்படுகிறது. கோவையின் நீர் ஆதாரத்தை உயர்த்த இதுவரி எந்த திட்டமும் இல்லை. கேரள மாநிலத்துடன் சிறுவாணி அணைக்காக போட்ட 100 ஆண்டு கால ஒப்பந்தமும் நிறைவடையும் நேரத்தில், இவ்வளவு மக்களின் தண்ணீர் தேவை எப்படி பூர்த்தியாகும்?

பழையன கழிதலும், புதியன புகுதலும் ன்னு புது புது தொழில்கள் வருவதனால், பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதெல்லாம் சரியே. ஆனால் I .T துறையினருக்கு கிடைக்கும் பல ஆயிர, லட்ச சம்பளத்திற்கு ஏற்ப விலைவாசியும் உயர்ந்து கொண்டே தான் போகும்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் கூட வருமானத்திற்கு ஏற்ப வாழ்க்கை நடத்த முடியுமாம்,10 ரூபாயில் கூட ஒரு நேர உணவு  கிடைக்குமாம். ஆனால் கோவையில் எல்லாமே விலை அதிகம் தான், இனி இது யாருக்கான நகரம்? சாதாரண தொழில் செய்பவர்களால் இனி பிழைக்க முடியுமா?

"பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்" -    உயரத்தான் முடியுமா?

தெரியாதவர்களாக இருந்தாலும் "வா கண்ணு சாப்பிட்டு போகலாம்" ன்னு அன்பா சொல்லிட்டு இருந்த மக்கள் பிழைக்க கஷ்டப்படும்  சமயத்துல, வேறு மாநிலமக்கள் வந்து இங்கு பிழைப்பதை ஏற்று கொள்ளத்தான் வேண்டுமோ? எங்க ஊரு மக்கள்  வாழ்க்கை நடத்த முடியாமல், எங்க மண்ணுக்கான அடையாளம் காணாம போக செய்யற இந்த வளர்ச்சி வேண்டாம்................

Friday, July 16, 2010

குட்டீஸ்

கதைகளை கேட்பதோடு மட்டும் அல்லாமல் கதாபாத்திரமாக மாறிவிடுவது எங்கள் வீட்டில் ரொம்ப பிரபலம். அதாவது,  பாட்டி வடை சுட்ட கதையில், நான் தான் பாட்டி, நான் வடை சுட, தேஜா காக்கா போன்று வடையை திருடி சென்று விடுவாளாம். கட்டிலின் மேலே சென்று உக்கார்ந்து விடுவாள். பின்பு நானே நரியாக மாறி சரியாக டயலாக்  சொல்ல வேண்டும், அவ இஷ்ட பட்டா வடைய கீழ போடுவா, இல்லன்னா ஏமாந்த நரியாக திரும்பி வர வேண்டும்,  இது மாதிரி நாங்க படிக்கற ஒவ்வொரு கதைகளிலும் ஏமார்ந்த கதா பாத்திரம் என்னுடையது.

அந்த வரிசையில, கண்ணன் வெண்ணைய திருடி சாப்பிட்ட கதை தேஜாவுக்கு ரொம்ப பிடிக்கும். அவளுக்கு போர் அடிச்சா, இந்த நாடகத்த தான் முதல்ல விளையாடனும்னு சொல்லுவா. போனா வாரம் ஒரு நாள்,
  "அம்மா, நீ தான் கண்ணா மம்மியாம் , நீ வெண்ணைய கடைஞ்சு மேல வை" ன்னு சொல்லிட்டே இருந்தா.
நான் ஏதோ அசதியில இருந்ததால "நான் கண்ணா மம்மி எல்லாம் இல்ல, தேஜா மம்மி தான்" ன்னு சொல்ல, ஒரு குச்சி எடுத்துட்டு வந்து "மந்திரம் சொல்ற சுதி (or
சுஜி) சொல்றேன், தேஜா அம்மாவை, கண்ணா அம்மாவா  மாத்துன்னு" சட்டுன்னு சொல்லவும், (உபயம்: சுட்டி டிவி, எனன தொடர்ல இப்படி வரும்னு தெரியல)  அதுக்கு அப்புறமா விளையாடாம இருக்க முடியுமா!

(கதைகள சொல்றத காட்டிலும், நடிச்சு காமிக்கறதால creativity  வளர  கண்டிப்பா வாய்ப்பு இருக்கு, ஒரு டயலாக் இப்படிதான் சொல்லனும்னு இல்லாம, அந்த நிமிஷத்துல அவங்களுக்கு தோன்றத சொல்லும் போதும், இந்த கதைய இப்படி மாத்திக்க்கலாமான்னு குழந்தைகளே கேட்க்கும் போதும் நமக்கு அது புரியும், (ஆனா பல சந்தர்ப்பங்கள்ல நம்ம மூக்க உடச்சுடுவாங்க, கவனமா இருக்கணும்!)